Monday, December 27, 2010

சுனாமி நினைவுகள்

ஆழிப்பேரலை
(27 . 12 . 2004 அன்று எழுதியது)

ஒத்துக்கொள்கிறோம்; நீர் வேண்டினோம்
நா உலர்ந்து வியர்வையில் குளித்து
தோழியரை முறைத்து நீருக்காக போராடினோம்
ஆம்; உண்மைதான்
நீருக்காக மன்றாடினோம்.
அண்டை மாநிலங்களின் தயவை நாடி
தலைநகரை பரிந்துரைக்க கோரி
நீருக்காக நாங்கள் செய்த வேள்விகள் கோடி.

அனைத்திற்கும் மேலாக
மாரி தரும் மேகத்தை
வசை மாறி பொழிந்தோம்.
எங்கள் அருமை கண்மணிகள்
கும்பகோண தீயில் கருக
அமிர்தமாய் பொழிந்து காக்க தவறிய இயற்கையை
நிந்தித்தோம் நாங்கள்
ஒத்துக்கொள்கிறோம். அதற்கு பதிலடியா இந்த கொடுமை?

மலையாய் எழுந்த நீர்
விழுங்கிய உயிர்களின் கணக்கு யாரறிவர்?
ஏதுமறியா இளந்தளிர்கள் மீது
அப்படியென்ன கோபம் இயற்கைக்கு?
இயற்கையின் சீற்றத்தால் நேரிட்ட அவலங்கள்
பதைபதைக்கும் எம் உள்ளங்கள்.
உறவுகளும் பெயர்களும் வெறும்
சவங்களாய் கணக்கெடுக்கப்படும் கோரம்.

எப்படி மீள்வோம் இத்துயரிலிருந்து
யார் தருவார் ஆறுதல் மருந்து? புரிந்துக்கொண்டோம்
இயற்கையில் புதைந்திருக்கும் அழகு
கண நேரத்தில் உண்டாக்கும் அழிவு.
நிலமகள் வாகாய் அசைந்து உட்கார
எங்கள் ஆணிவேரே ஆட்டம் கண்டது.
இயற்கையை வென்றதாய் மனிதன் கொக்கரிக்க
அதன் ஒரு பெருமூச்சில் அவன் ஆணவம் அடங்கியது.

இப்பிரபஞ்சத்தில் நமக்கான இடம் காட்டப்படும் நேரமிது.
சரியான குறிப்பறிந்து வாழும் காலத்தை
அற்பச் சண்டையில் ஆணவச் செருக்கில் அழிக்காமல்
மனிதநேயத்தோடு நல்லிணக்கத்தோடு அழகாய் அளவாய்
அறிவோடு வாழ இயற்கை புகட்டும் பாடமிது.
கற்றுக்கொண்டோம் எமக்கான பாடத்தை;
போதுமிந்த முரட்டு கல்வி; வணங்குகிறோம் இயற்கையை
விட்டுவிடு இத்தோடு எம்மை.








No comments: