Monday, December 27, 2010

ஒரு பார்வையாளியின் பதிவு


நேற்று வானம் சிறிது மேக மூட்டமாயிருந்தது. வீட்டிற்குள் நுழையுமுன்பே வாசலில் வாடியிருந்த மல்லிகை பந்தல் மனதை உறுத்தியது. வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு அநாதை ஆசிரம வண்டியில் பழைய சாமான்கள் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தன.

எங்கள் வீட்டை விற்று விட்டோம், மாமா இறந்து ஒரு வருடமாகி விட்டது. ஊருக்கு வெளியே மிக தொலைவில் இருக்கும் இந்த வீட்டில் இருப்பதற்கு இப்போது யாரும் தயாராக இல்லை. இந்த மாதக் கடைசியில் வீட்டை ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன் வீட்டில் உள்ள சாமான்களை காலி செய்துக் கொண்டிருக்கிறோம்.

நான் என் குழந்தையுடன் மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தேன். ஒரு வருடம் கழித்து வருகிறேன். வரவேற்பறையைத் தாண்டி நீள வராந்தா. இருப்பக்கமும் சிறு சிறு அறைகள். எனது மாமனார் தனது மூன்று மகன்களின் குடும்பத்திற்காக என்று கனவு கண்ட அறைகள். கடைசியாக சமையலறை. அதை தாண்டி ஒரு தோட்டம்.

வீட்டைக் கடந்து தோட்டத்தை அடைந்தேன். கிணற்றடியில் துவைக்கும் கல். எத்தனைக் கதைகளை சொல்லும்? இன்னும் காய்க்காத நான்கு தென்னை மரங்கள், ஒரு வாழை மரம். சற்று தள்ளி ஒரு நாரத்தை மரம். அதன் கிளையில் ஒட்டடை. மனது வலித்தது. இங்கே வந்து சென்ற போதெல்லாம் என் மாமியார் பழங்களை ஆசையாக பறித்து என் பையில் அடுக்கியது நினைவிற்கு வந்தது. தென்னை மரத்தை நட்டு நீர் ஊற்றும்போது தங்கள் குழந்தைகளுக்கு என்று நினைத்திருப்பார்களோ?

நீர்த்தொட்டியின் பக்கவாட்டில் மூன்று கோடுகள் - கிரிக்கெட் ஸ்டம்ப் வரைந்திருந்தது என் கண்ணில் பட்டது. அதிர்ச்சியாய் இருந்தது. எத்தனை நாட்கள் சிறுவர்களும் பெரியவர்களும் இங்கு குதூகலமாக வீட்டு பெண்கள் திட்டுவதை பொருட் படுத்தாமல், வேலைக்கு இடைஞ்சலாக விளையாடி கொண்டிருந்தனர்? இப்போது தான் வீட்டின் அமைதியை கவனித்தேன். அது என் மேல் கமிழ்ந்து என்னை அழுத்துவது போலிருந்தது.

எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்களே ஆகிறது. என் மனதிலேயே இந்த வீடு இத்தனை சலனங்களை ஏற்படுத்துகிறதே, என் மாமியார் 35 வருடங்களாக இருந்த வீடு. அவர்களுக்கு இந்த இழப்பு கணவரை இழந்த அதே உணர்வை மறுபடியும் ஏற்படுத்துமோ? அவர்கள் மெல்ல ஒவ்வொரு அறையாக தன் மகளுடன் வளைய வந்துக் கொண்டிருந்தார்,

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பரணிலும் எண்ணிலடங்கா சாமான்கள். வாடகை வீட்டில் இருப்பதில் ஒரு வசதி. வீடு மாற்ற நேரும் போதும் இடப் பற்றாக்குறையினாலும் பழையன கழிதல் நடந்துக் கொண்டேயிருக்கும். சொந்த வீட்டில் என்றாவது தேவைப்படும் என்று எடுத்து வைக்கப்படும் சாமான்கள் மறக்கப்பட்டு, அதை களைவதே பெரும் ப்ரையத்தனமாகி அப்படியே தேங்கி விடுகிறது. ஒவ்வொரு பொருளையும் யாருக்கு கொடுப்பது என்று என் மாமியார் யோசித்து யோசித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய அலுமினிய தட்டை எனக்கு கொடுத்து மிளகாய் காய வைக்க வைத்துக் கொள் என்றார். உட்காரும் மனை ஒன்றையும் கொடுத்து இது உனக்காக எடுத்து வைத்தேன் என்றார். எல்லோரும் தங்கள் நகர குடியிருப்பில் உள்ள இட நெருக்கடிக்கு பயந்து அவரிடம் கோபித்தாலும் , ஒவ்வொரு பொருளின் பின்பும் உள்ள நினைவுச் சுமைகளை அவரைத் தவிர யாரறிவார்?

புகைப்படலமாய் வீடு முழுவதும் தூசி படிந்திருந்தது. என் குழந்தை என் மாமனாரின் துளசி மாலை ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் அந்த இனிய பருவத்திற்கே உரிய குழந்தைத்தனத்துடன், அவளது உடையும் உடலும் அழுக்காவதைப் பொருட்படுத்தாமல் சலனமின்றி விளையாடிக் கொண்டிருந்தாள். என் மாமியார் நினைவுகள் அமிழ்த்த வேலையில் மூழ்கி மௌனமாக பாகப்பிரிவினை செய்துக் கொண்டிருந்தார். வீட்டின் அமைதி என்னுள்ளும் புகுந்தது.

5 comments:

kousalya said...

Heart-rending one.

Unknown said...

parvaiyali?- new thamizh word! or alraedy is it existing ? dont know! Like word "Actress" which had become gender neutral .
otherwise u passed on the pain perfectly.

chakraz said...

nijamaga valikkirathu.

Geetha said...

Oh dear....I understand...

prema -just sharing my thoughts said...

hai geetha, as an observer if it is painful..as u rightly said ur mother-in-law would have felt real pain. I can truly empathise and i remember the days when amma and i refused to go to adyar.. after signing it over for fear of seeing it being demolished.. however, curiosity dragged me to the place which was half broken with a friend and i happened to narrate to her the various areas and the memories they carry. I can map out a small collection of stories out of our life in our home. Till today.. when i talk to my children too i can vividly recall my home and their memories , the shelve, the arrangements , the small spaaner, morams etc.. In fact not being able to forget my mother' love for the parijatha flowers which bloom int he night giving out a divine scent.. I have a plant in a pot on my terrace and every morning when i give her the few flowers with my good morning... her smile is beyond words... As some one rightly said.. it is the little things which gives us great pleasure... My empathies with ur mil and my mom and gratefulness for ur understanding... not every one realises that the value of a land with a house is not only monetary but much much more than that...... THANK U